17. பட்சி வர்மம்
வேறு பெயர்கள் :

1. பட்சி வர்மம் (வர்ம சாரி-205)
2. பட்ச வர்மம் (அடி வர்ம சூட்சம்-500)

பெயர்க்காரணம் :

நேம வர்மத்தின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளதால் இவ்வர்மம் பட்ச வர்மம் (பட்சம் = பக்கம்) என்று வழங்கப்பட்டு பின்பு பட்சி வர்மம் என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பட்சி என்றால் பறவை என்று ஒரு பொருள் உண்டு. இவ்வர்மத்தில் அடிபட்டால், பூச்சி சுழல்வது போல நோயாளி கிறுகிறுப்புடன் சுழன்று நிற்பர் (வர்மசாரி-205) இதனால் இவ்வர்மம் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘காணரிய கருவிழிக் கீழ் மந்திரக் காலம்
கருது பட்ச மரையாகும் நேம வர்மம்
பூணரிய அரையிறைக்கு கீழ் பட்சி வர்மம்’ (அடி வர்ம சூட்சம்-500)

2. ‘வாலமென்ற கருவிழியருகில் மந்திரக் காலம்
வளமான நெற்றி நடு பட்சி வர்மம் நேம வர்மம்’
(வர்மசாரி-205)

3. ‘பாரப்பா நெற்றி நடு நேம வர்மம்
பகருமரை இறையின் கீழ் பச்சிவர்மம்’ (வர்ம பீரங்கி-100)

4. ‘காலமென்ற பட்சி இரண்டு நேமம் ஒன்று’ (வர்மசாரி-205)

விளக்கம் :

இவ்வர்மம் இரட்டை வர்மமாகும். இவ்வர்மம் நேம வர்மத்துக்கு அரை விரலளவுக்குப் பக்கவாட்டில் உள்ளது (அடி வர்ம சூட்சம்-500) அதாவது இவ்விரு பட்சி வர்மங்களுக்கு மத்தியில் நேம வர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மத்திற்கான குறிகுணங்கள் தனியே உள்ளன.

நேம வர்மத்துக்கு அரை விரலளவுக்குக் கீழே கூறப்பட்ட ‘பச்சை’ அல்லது ‘பச்சி’ என்கிற பட்சி வர்மம் ஒற்றை வர்மமாகும் இவ்வர்மத்திற்கென தனிக்குறிகுணங்கள் உள்ளன.

இடம் :

நெற்றியின் நடுவில், நேம வர்மத்துக்கு இருபுறமும் உள்ளது.

குறிகுணம் :

பூச்சி சுழல்வதைப் போல நோயாளி விறுவிறுப்பாய் சுழன்று நிற்பர். வாய் மற்றும் மூக்கிலிருந்து நீர் பாயும்.

காலக்கெடு :

நாழிகை 3

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி