16. நேம வர்மம் – Nema Varmam

வேறு பெயர்கள் :

1. நேம வர்மம் (வர்ம பீரங்கி-100)
2. நிம வர்மம் (வர்மசாரி-205)
3. ஏம வர்மம் (வர்ம ஒடிவு முறிவு சாரி-1500)
4. நேரு வர்மம் (வர்ம கண்ணாடி-500)

இடம் :

நெற்றி வர்மத்துக்கு அரை இறைக்குக் கீழே பட்சி வர்மங்களுக்கு நடுவில்.

பெயர்க்காரணம் :

‘நேமம்’ என்றால் நித்திய அனுஷ்டானங்கள் என்று பொருள் இந்துக்களின் நித்திய அனுஷ்டானங்களில் ஒன்று நெற்றியில் திருநீறு அல்லது நாமம் இடுவதாகும். நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ளும் இடத்தில் இவ்வர்மம் இருப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

இருப்பிடம் :

1. ‘வாலமென்ற கருவிழியருகில் மந்திரக் காலம்
வளமான நெற்றி நடு பட்சி வர்மம் நேம வர்மம்
பாலமென்ற அரையிறை கீழ் பால வர்மம்’ (வர்மசாரி-205)

2. ‘பாரப்பா நெற்றி நடு நேம வர்மம்
பகருமரை இறையின் கீழ் பச்சிவர்மம்’ (வர்ம பீரங்கி-100)

3. ‘அந்தமாய் நெற்றி நடு நேம வர்மம்
அதற்கு அரை இறையின் கீழ் பச்சை வர்மம்’
(வர்ம கண்ணாடி-500)
4. ‘காணரிய கருவிழிக் கீழ் மந்திரக் காலம்
கருது பட்ச மரையாகும் நேம வர்மம்
பூணரிய அரையிறைக்கு கீழ் பட்சி வர்மம்’ (அடி வர்ம சூட்சம்-500)

5. ‘காலமென்ற பட்சி இரண்டு நேமம் ஒன்று
கண்டுகொள் பாலவர்மம் ஒன்றதாகும்
வாலமென்ற இரத்தமொன்றதாகும்
வளமான பச்சையொன்று மங்காரி ரண்டு’ (வர்மசாரி-205)

விளக்கம் :

நெற்றி நடுவில் பட்சி என்ற இரு வர்மங்களுக்கு மத்தியில் உடலின் மையக்கோட்டில் இந்த நேம வர்மம் அமைந்துள்ளது. இதற்கு அரை இறைக்குக் கீழே பச்சி என்ற பச்சை வர்மம் உள்ளது. ‘வர்மசாரி-205’ என்ற நூல் மட்டும் இந்நேம வர்மத்துக்கு அரை இறைக்குக் கீழே பால வர்மம் உள்ளது என்று குறிப்பிடுகிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. பால வர்மம், நேம வர்மத்துக்கு அரை இறைக்கு மேலே உள்ளது என்பதே சரியானதாகும்.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.