14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam

வேறு பெயர்கள் :

1. மின்வெட்டி காலம் (வர்ம பீரங்கி-100)
2. பண வர்மம் (வர்ம விதி / சுஸ்ருத சம்ஹிதா)
3. முன்வெட்டி வர்மம் (வர்ம நரம்பறை சூத்திரம்-107)

இடம் :

திலர்த காலத்துக்கு அருகில் உள்ளது.

பெயர் காரணம் :

‘மீளவே மின்வெட்டி காலம் கொண்டால்
மேகத்தைப் பார்க்கும்…’ (வர்ம பீரங்கி-100)

இவ்வர்மத்தின் குறிகுணங்களில் முக்கியமாக ‘மேகத்தை பார்க்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வர்மம் ஏற்படும் போது மின்னல் வெட்டுவதை போல தனக்குள் தெரிவதால், உண்மையில் மின்னல் தான் வெட்டுகின்றதோ என்ற சந்தேகத்தில் நோயாளி மேகத்தை பார்ப்பான். இதனால் இவ்வர்மத்திற்கு ‘மின்வெட்டி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.

இருப்பிடம் :

1. ‘………………………………… திலர்த காலம்
காலமென்ற அரையிறை கீழ் மின்வெட்டிக்காலம்
(வர்ம பீரங்கி-100)

2. ‘………… திலர்த காலம்தானே இன்னமாம்
அரையிறையின் கீழ் மின்வெட்டி வர்மம்’
(வர்ம கண்ணாடி-500)

3. ‘……….. திலர்த காலம்
கருதுமோரிறை வலத்தே மின்வெட்டி வர்மம்’
(வர்மசாரி-205)

4. ‘திலர்தமொன்று மின்வெட்டி ரெண்டு’ (வர்மசாரி-205)
5. ‘திலர்தகாலத்துக்கு அடுத்து மேல் இமை பள்ளத்திலும்
கீழிமை பக்கத்திலும் மின்வெட்டிகாலம்’ (வர்ம விரலளவு நூல்)

6. ‘நாசியினிலிரு புறத்து நற்செவிக்குந்தாரையாய்க்
காதுகழுத்துக்கன்ன மளவுநேர் வாயிருக்கும்
ஓதுபண வன்மத்திலுற்ற……………..’ (வர்ம விதி)

7. ‘கேளடா முன்வெட்டியொடு திலச மூர்த்தியாகும் பாரே’
(வர்ம நரம்பறை சூத்திரம்-107)

விளக்கம் :

வர்ம கண்ணாடி-500, வர்ம பீரங்கி-100 என்ற இரு நூல்களும் திலர்த வர்மத்திலிருந்து அரை இறைக்கும் கீழே மின்வெட்டி வர்மம் உள்ளதாக கூறுகின்றன. இது சரிதான் ஆனால் வர்மசாரி-205, வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200 என்ற இரு நூல்களும் இவ்வர்மத்தை இரட்டை வர்மம் என்று குறிப்பிடுகின்றன. எனவே இவ்வர்மம், திலர்த வர்மத்துக்கு அரை விரலுக்கு கீழே மையக்கோட்டில் அமைந்திருக்க முடியாது. இவ்வர்மம் முதல் இரு நூல்களும் குறிப்பிடுவதைப் போல திலர்த வர்மத்துக்கு அரை விரலுக்கு கீழாகவும், வர்மசாரி-205 குறிப்பிடுவதைப் போல திலர்த வர்மத்திலிருந்து அரை இறைக்கு பக்கவாட்டிலும் அமைந்திருக்கிறது

Surface Anatomy : Just Superio-lateral to the nasal bridge

பண வர்மத்தில் அடிப்பட்டால் நாசி மணம் அறியும் உணர்ச்சியை இழந்துவிடும் என்று ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன.

உடற்கூறு இருப்பிடம் :

On the floor of the anterior cranial fossa, about 0.5cm from the median plane, lies a long (3cm) frazile stalk with a slightly enlarged anterior end, the olfactory tract and bulb, (Grants method of Anatomy, P.No.483)

மேற்கண்ட குறிப்பிலிருந்து இவ்வர்மம் மைய நடுக்கோட்டிலிருந்து 0.5 செ.மீ. (சுமார் அரை விரல் அளவு) பக்கவாட்டில் உள்ளது என்று தெரிகிறது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி