வேறு பெயர்கள் :
1. குதிரை முகவர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. குதிரை வர்மம் (வர்ம சாரி-205)
3. எல்லு வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
4. விஷ வர்மம் (வர்ம நிதானம்-300)
5. விஷபந்த வர்மம் (வர்ம ஆணி-108)
6. விஷமணிபந்த வர்மம் (வர்ம விளக்கம்)
7. இந்திரவத்தி (வர்ம விதி)
இடம் :
முழங்காலின் மத்தியில் முன் பக்கமாக உள்ளது.
இருப்பிடம் :
1. ‘நன்றனவே முழங்காலில் குதிரைமுகக்கால்
நாடியதற்கங்குலமே நாலின் கீழே
மன்றனவே கொம்பேறி வர்மமென்றும்’ (வர்ம கண்ணாடி-500)
2. ‘வருந்தவே முட்டிலகம் குதிரை வர்மம்’ (வர்ம சாரி-205)
3. ‘வேந்தனே பொருத்து வர்மத்திலிருந்து எட்டு
எட்டுவிரல் உயரே பார் எல்லு வர்மம் இதற்கு
எட்டுவிரல் மேல் நாய்தலை வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
4. ‘தீருமா முழங்காலில் வர்மம் கேளு
திறமான மையமதில் குதிரைமுக வர்மம்’ (வர்ம சூத்திரம்-101)
5. ‘தள்ளவே முழங்காலில் மத்திபத்தில் விஷ வர்மம்’ (வர்ம நிதானம்-300)
6. ‘கால் மூட்டுவர்மம் இதற்கு பத்து விரலுக்குக் கீழே குதிரைமுக வர்மம் இதற்கு பத்து விரலுக்குக் கீழே நாய்கால் பொருத்து வர்மம்’ (வர்ம விரலளவு நூல்)
7. ‘முட்டுக்கண்ணு வர்மத்திற்கும், கரண்டை கண்ணு
வர்மத்திற்கு நடுவில் குதிரைமுக வர்மம் உள்ளது’ (வர்ம நூலளவு நூல்)
8. ‘முழங்கால் மத்திபத்தில் விஷபந்த வர்மம்
அல்லது குதிரை வர்மம்’ (வர்ம ஆணி-108)
9. ‘எங்கணைக் கால் நடு விந்திர வத்தியாம்
தங்குறு வன்மத்திற் சத்திரஞ் சல்லியபம்’ (வர்ம விதி)
10. ‘ தொடையில் முட்டுச் சிரட்டைக்கும் நான்கு
விரலளவுக்கு அப்புறம் (விஷ) மணிபந்த வர்மம்’ (வர்ம விளக்கம்)
11. ‘காலிலே குதிரைமுகக் காலத்தின் அங்குலம்
நாலிலே நவிலுவோம் கொம்பேறி வர்மத்தின் தானம்’(வர்ம லாட சூத்திரம்-300)
விளக்கம் :
முழங்காலின் நடுப்பகுதியில் முன்பக்கமாக முழங்கால் மூட்டுக்கும், கரண்டைக் கண்ணுக்கும் நடுவில் இவ்வர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மத்துக்கு சுமார் நான்கு அல்லது ஐந்து விரலளவுக்கு கீழ் கொம்பேறி வர்மம் உள்ளது. நாய்தலை வர்மத்திலிருந்து எட்டு விரலளவுக்கு கீழே இவ்வர்மம் அமைந்துள்ளது.
ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)
நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி