101. பட வர்மம் – Pada Varmam

வேறு பெயர்கள் :

1. பாதசக்கர வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)
2. பட வர்மம் (வர்ம கண்ணாடி-500)
3. படங்கால் வர்மம் (வர்ம பீரங்கி-100)
4. படமுறித்தான் வர்மம் (வர்ம விரலளவு நூல்)
5. பட்சனி வர்மம் (வர்ம சாரி-205)
6. பத்தி வர்மம் (வர்ம லாட சூத்திரம்-300)
7. கூர்ச்சம் (வர்ம விதி)

இடம் :

காலின் படப்பகுதியின் மையத்தில் உள்ளது.

பெயர்க்காரணம் :

பாதத்துக்கு சக்கரம் போல காணப்படும் ‘படம்’ எனப்படும் பகுதியில் இவ்வர்மம் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது.

இருப்பிடம் :

1. ‘தடம்பெரிய படம் நடுவில் பாதசக்கரம்’ (வர்ம ஆணி-100)

2. ‘கால் கண்ணிலிருந்து பெருவிரல் நுனிவரை அளவெடுத்து (12 விரலளவு) இரண்டாக மடக்கினால் (6 விரலளவு) பாதசக்கர வர்மம் அறியலாம்’
(வர்ம நூலளவு நூல்)

3. ‘மன்றான படமதிலே படவர்மந்தான்’ (வர்ம கண்ணாடி-500)

4. ‘முடிச்சு வர்மத்துக்கு இரண்டு விரலுக்குக் கீழே
படைமுறித்தான் காலம்’ (வர்ம விரலளவு நூல்)

5. ‘அடிபடமே படவர்மம் மேலே கண்ணுபுகையும் காலம்’ (அடிவர்ம சூட்சம்-500)

6. ‘கூறடா இடத்தில் பட்சினியின்வர்மம்’ (வர்ம சாரி-205)
7. ‘பாமென்ற சுண்டோதரி வர்மம் மீதி
படவர்மம் கண்புகைக் காலமெண்ணே’ (வர்ம பீரங்கி-100)

8. ‘………………………………………. கவளி வர்மம்
நாலுண்டு அதுகட்கு இருவிரல் மேலே
ஆமெனவே பாதச்சக்கர வர்மமாகும்
அதிலிருந்து நாலுவிரல் உயரே பார்த்தால்
கேமெனவே காணும் கீழ் முடிச்சி வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

9. ‘சிப்பிர வன்மமேலே சேரிரண்டங்குலத்தின்
ஒப்புறக் கூர்ச்சமென்னு மொருவன்மந்……’ (வர்ம விதி)

10 ‘காலம் பத்திக் கருகினில் தான் கண் புகைக்காலம்’
(வர்ம லாட சூத்திரம்-300)

விளக்கம் :

காலின் பட பகுதியின் மையத்தில் காணப்படுகிறது. முடிச்சி வர்மத்திலிருந்து இரு விரலளவுக்கு கீழாகவும், கவளி வர்மத்திலிருந்து இரு விரலளவுக்கு மேலாகவும் இவ்வர்மம் அமைந்துள்ளது.

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி